Tuesday, January 7, 2014

காதல் திருமணமும் திருமணச் சட்ட‍மும்: உறவுகளால் அச்சுறுத்தல் மற்றும் சொத்துரிமை பிரச்னைகள் வந்தால்…

காதல் திருமணம் செய்துகொண்டால் சொத்துரிமை பறிபோகுமா?

ஒரு பெண், ஒருவரைக் காதலித்து அவரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ள‍னர். ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பின் அவர்கள் முன் யோசனையாக சட்ட ஆலோசனைகள் தேவைப்படும் அல்ல‍வா? அவர்களது காதல் திரு மணத்தின் காரணமாக பிற்காலத்தில் அவர்களுக்கு ஏதும் பிரச்னைகள் வராமல் தவிர்க்க… எந்த முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம்? இரு தரப்பு சொத்து பங்கீடுகள் தட்டிப்போக வாய்ப்பு உண்டா? சட்டப்பூர்வ திருமண பதிவுக்கு அந்த பெண் மேற்கொண்டாக வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? இருதரப்பு உறவுகளால் பிரச்னைகள் வந்தால் அடைக்கலம் மற்றும் பாதுகாப்புக்கு யாரை அணுகலாம்?

”இருவருமே இந்துக்கள் எனில், இந்து திருமணச் சட்டத்தின்கீழ் கோயில் அல்லது மத வழக்கப்படி எங்கு வேண்டுமானாலும் திருமணத்தை மேற்கொள்ளலாம். இருவருமே கிறிஸ்தவர் அல்லது ஒருவர் மட்டுமே கிறிஸ்தவர் எனில், கிறிஸ்தவ சட்டத்தின்படி பதிவாளர் அந்தஸ்திலிருக்கும் பங்குத் தந்தை இருக்கும் தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்ளமுடியும். இருவருமே இஸ்லாமியர் எனில் , குறைந்தது 2 சாட்சிகளுடன்கூடிய ஒரு ஒப்பந்தம் போதும். இடம் முக்கியமல்ல.

இந்த மூன்று மத திருமணச் சட்டங்கள் தவிர்த்து, தமிழகத்தில் சுய மரியாதை திருமணச் சட்டத்தின் கீழும் திருமணம் செய்து கொள்ள முடியும். பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள், ஒரு அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் என எவர் முன்னிலையிலும் தாலி, மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகளுடனோ அல்லது அவை இன்றியோ திருமணம் செய்யமுடியும்.

எந்தவொரு சாதி, மதம் உள்ளிட்ட சமூகப் பிரிவுகளை பொருட்படுத்தாது, சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி திருமணப் பதிவாளர் முன்னிலையில் திருமண அங்கீகாரத்துக்கு வழி செய்யும் சிறப்புத் திருமணச் சட்டமும் இருக்கிறது.

காதலிக்கும் இருவரும் இருவேறு பிரிவுகளாக அதாவது இருவேறு சாதிகளைக்காரர்களாகவோ அல்ல‍து மதக்காரர்களாகவோ இருந்தால், அவர் மேற்கண்ட திருமணச் சட்டங்களில் உங்களுக்கு உகந்ததை தேர்வு செய்து கொள்ளலாம். இவர்களது திருமணத்திற்கு சட்ட‍ம் தடையாக இருக்காது. மதமோ ஜாதியோ அவை சட்டத்தின் கீழ் அவை ஒரு பொருட்டில்லை.

சொத்துரிமை

ஒருவருடைய சொத்துக்கள் சுயமாக சம்பாதித்தவை எனில், அவராக யாருக்கு வேண்டுமானாலும் அதை எழுதி வைக்க முடியும். சுய சொத்தாக இருந்தும் உயில் ஏதும் எழுதி வைக்காமல், அதன் உரிமை யாளர் இறந்து போனால்… சட்டப் பூர்வமான வாரிசுகள் அனைவருக் குமே உரிய பங்கீடு பெற உரிமை தானாகவே வந்து விடும். பூர்வீக சொத்தாக இருக்கும் பட்சத்தில்… வாரிசுகள் அனை வருக்குமே உரிய பங்கு உண்டு. காதல் திருமணம் மட்டுமல்ல, வேறு எந்தவிதமான காரணத்தைக் காட்டியும் அதை மறுக்க முடியாது. அப்படி மறுக்கும் பட்சத்தில் சட்டத் தின் உதவியோடு உரிய பங்கை மீட்கமுடியும். சட்டப்பூர்வமான வாரிசுகள் என்பதில் ஆண் , பெண் பேதம் கிடையாது.

திருமண பதிவுச் சட்ட‍ம்

தமிழ்நாடு கட்டாய திருமண பதிவுச் சட்டம் கைகொடுக்கும். இதன்படி எந்த வகை திருமணம் என்றபோதிலும், சட்டப்படி பதிவு செய்து கொள்வது 2009 நவம்பரிலிருந்து கட்டாயம் செய்யப்பட்டுள்ளது. திருமணமான 90 நாட்களில் இதை மேற் கொண்டாக வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், மேற்கொண்டு அபராத கட்டணத்தோடு அடுத்த 60 நாட்களில் கட்டாயமாக பதிவுசெய்தாக வேண்டும்.

சட்டப்பூர்வமான திருமணம் என்பதன்கீழ் வயதுத்தகுதி ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும். ரத்த சகோதர உறவு இருக்கக் கூடாது. ஏற்கெனவே திருமணம் ஆகி இருக்கக்கூடாது. இந்த நிபந்தனைகள் எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் ஒரு ஜோடியின் திருமணத்துக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் கிடைத்து விடும்.

காதல் திருமணத்துக்குப் பிறகு பிரச்னைகள் வந்தால்…

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். அவர்கள் பேச்சுவார்த்தை, கவுன்சலிங் என சுமூக தீர்வுகளுக்கு வழி செய்வார்கள். எல்லை மீறிய அச்சுறுத்தல் மற்றும் தொந்தரவுகள் வந்தால் ‘பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இதற்கென இருக்கும் பாதுகாப்பு அலுவலரை அணுகி முறையீடு செய்யலாம். இதே கோரிக்கையோடு மாவட்ட ஆட்சித் தலைவரையும் அணுகலாம். உரிய பாதுகாப்பு கிடைக்கும்.

தமிழ்காரன்  தகவல்களை தேடித் தருபவன்

No comments:

Post a Comment